பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரி பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரி பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும்!


நாட்டில் இருக்கும் அரபுக்கல்லூரிகள் அனைத்தும் பொதுவான பாடத்திட்டம் ஊடாக கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும் பரீட்சைகளை பரீட்சைகள் திணைக்களம் ஊடாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


நாட்டில் 321 பதிவு செய்யப்பட்ட அரபுக் கல்லூரிகள் இருக்கின்றன. 132 பதிவு செய்யப்படாத அரபுக் கல்லூரிகள் இருக்கின்றன. 72 அரபுக்கல்லூரிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன. அந்த பதிவுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


அதேநேரம் இந்த அரபுக்கல்லூரிகள் அனைத்தும்  பொதுவான பாடத்திட்டம் ஒன்றின் ஊடாக கொண்டுசெல்லப்பட வேண்டும். இது தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டுவந்த நிலையில், பொதுவான பாடத்திட்டம் அமைக்க குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.


குறித்த குழு அது தொடர்பான பாடத்திட்டத்தையும் தயாரித்திருந்தது. பின்னர் இந்த பாடத்திட்டத்தை மீள் பார்வையிட 2022ஆம் ஆண்டும் நிபுணர்குழு அமைக்கப்பட்டபோது, அந்த நிபுணர்குழுவும் அதுதொடர்பில் ஆராய்ந்து குறித்த பாடத்திட்டத்துக்கு ஆதரவளித்திருந்தது. 


பின்னர் கல்வி அமைச்சுக்கு இது மாற்றப்பட்டபோது இந்த பாடத்திட்டத்தை மீள் பரிசீலனைசெய்ய மீண்டும் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவும் குறித்த பாடத்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கிறது.


அதனால் அரசாங்கம் இந்த பாடத்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்  பரீட்சைகளை பரீட்சைகள் திணைக்களம் ஊடாக நடத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் பள்ளிவாசல்களில் கடமை புரியும் உலமாக்கள் மற்றும் முஅத்தீன்களுக்கு முறையான பயிற்சி திட்டம் ஒன்று முஸ்லிம் கலாசார திணைக்களம் ஊடாக நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் நிகழ்த்தப்படும் பிரசங்கங்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


இதேவேளை, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பிராந்தியம் ஒன்று மட்டக்களப்பில் இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்னர் இது அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது இன்னும் முறையாக இயங்காமல் இருக்கிறது.


அதனால் அதற்கு ஒரு உதவி பணிப்பாளர் ஒருவரை நியமித்தும் தேவையான அதிகாரிகளை நியமித்தும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இருந்து சிறிய தேவைக்கும் கொழும்புக்கு வந்துபோக தேவை ஏற்படாது. அத்துடன் இந்த பிராந்தியத்தை ஊவா மாகாண மக்களும் பயன்படுத்த முடியும். 


மேலும் அரபு மொழி புத்தங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவதற்கு இருக்கும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் ஒருவருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் 26ஆயிரம் அல்குர்ஆன் தமிழ்மொழி பெயர்ப்பு பிரதிகள் இன்னும் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.