கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் இன்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவர் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்குச் சென்ற துப்பாக்கிதாரி கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடரப்புடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்குச் சென்ற துப்பாக்கிதாரி கல்கிஸ்ஸை வட்டரப்பெல பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 07 ஆம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் ஆவார்.
துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணும் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளார்.
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கணேமுல்ல சஞ்சீவ' வழக்கு விசாரணைக்காக சுமார் 12 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் அழைத்துவரப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணிகள் அதிகளவில் சோதனைக்குட்படுத்தப்படாததை அறிந்திருந்த சந்தேக நபர்கள் சட்டத்தரணி வேடத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் நீதிமன்றதிற்கு சென்றுள்ளனர்.
இது மிகவும் பாரதூரமான ஒரு செயலாகும். இது தொடர்டபில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.