இறுதிக்கட்டத்தில் கைவிடப்பட்ட தெஹிவளை பாடசாலை விவகாரம்! சதியா? கோழைத்தனமா? நடந்தது என்ன?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறுதிக்கட்டத்தில் கைவிடப்பட்ட தெஹிவளை பாடசாலை விவகாரம்! சதியா? கோழைத்தனமா? நடந்தது என்ன?


1957 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீலாது சங்கமாக பல சமூக சேவைகளை செய்து கொண்டிருந்த இலக்கம் 9 மூவர் வீதியில் அமைந்திருந்த இடம், பிரதேச மக்களின் தேவையை கருதி மீலாத் முஸ்லிம் வித்தியாலயம் என்னும் பெயருடைய பாடசாலையாக மாற்றப்பட்டது.


சுமார் 10 க்கும் குறைவான மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் ஆரம்பம், காலம் செல்லச் செல்ல தெஹிவலை பகுதியை நோக்கிய முஸ்லிம்களின் அதிகரித்த  குடியேற்றம் காரணமாக மாணவர்கள் தொகை அதிகரித்தது. தற்போது இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 600 பேராகும். 


கடும் இடப்பிரச்சினை காரணமாக  அண்மைக்  காலப்பகுதியியில்  ஒரு தனவந்தர், தனிக்கட்டடமாக இருந்த இப்பாடசாலையை  மூன்று மாடிக் கட்டிடமாக கட்டிக் கொடுத்த போதிலும், மாணவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காததாக உள்ளது. 


இந்தப் பாடசாலையில் கொள்ளக்கூடிய மாணவர்களின் அளவு தற்போது 400 பேர்களாகும். சுமார் 200 மாணவர்கள் வெளியிலும்  வாகன தரிப்பிடங்களிலும், பாடசாலையின் ஓரங்களிலும்  கொட்டைகளை விரித்தவர்களாக கல்வி கற்று வருகின்றனர். வெயில் காலங்களில் ஓரளவு சமாளித்த போதிலும் மழை காலங்களில் ஈடு கொடுக்க முடியவில்லை.


நிலைமை இவ்வாறு இருக்க,  இப்பகுதி மக்கள் பாடசாலையின்றி படும் இன்னல்களை கண்ட தெஹிவளை கவ்டான வீதியில் வசிக்கும் பொறியியலாளர் நஸ்ருதீன்  அவர்கள் பிரபல  வர்த்தகர் ஒருவரிடம் நிலைமையை விளக்கிச் சொல்லவே, அந்த வர்த்தகர் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களிடத்தில் விடயங்களை எடுத்துறைத்தார்.


அப்போதைய ஜனாதிபதி அவர்கள் கல்வி அமைச்சருக்கு அறிவித்து,  பாடசாலை ஒன்றை அமைக்க கல்வி அமைச்சிடம் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக, தெஹிவலை பிரதேசத்தில் நீண்ட காலமாக மாணவர்கள் இன்றி மூடப்பட்டிருந்த ஸ்ரீ சுமக வித்யாலயத்தை மீலாத் முஸ்லிம் வித்யாலயத்துக்கு கையளிக்க முன்னைய   கல்வி அமைச்சர்  நடவடிக்கை எடுத்தார் .


இடையில் ஏற்பட்ட தேர்தல் காரணமாக குறிப்பிட்ட வேலைகள் இடைநிறுத்தப்பட்ட போதும்,  புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்பு பொறியியலாளர் அவர்கள், மேல்மாகன ஆளுநரிடம் விடயத்தை எடுத்துக்கூறவே அவரும் அவசர அவசரமாக செயல்பட்டு இடைநிறுத்தப்பட்ட வேலைகளை தொடர்ந்து முடிவு செய்து, இப்பாடசாலையை மீலாது முஸ்லிம் வித்யாலயத்திடம் கையளிக்க சட்டபூர்வமாக  ஏற்பாடு செய்தார்.


பாடசாலை கிடைத்ததை தொடர்ந்து  மேலதிக வேலைகளில் தெஹிவளை mosques federation  ( பள்ளிச் சங்க ) அமைப்பும் இணைந்து கொண்டது.


இந்நிலையில் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி பாடசாலையைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. 


பாடசாலை தொடக்கத்தை எந்தவித ஆரவாரங்களும் இன்றி இரகசியமாக ஆரம்பிப்பது என பலர் ஆலோசனைகள் கூறப்பட்ட போதிலும்,  பள்ளிச் சங்கத்தின் சில உறுப்பினர்களும், சில பெற்றோர்களும் இணைந்து பணத்தை வசூலித்து சுமார் 27 லட்சங்களை பாடசாலைக்கு வர்ணம் தீட்டுதல் உட்பட பல செலவுகளைச்  செய்தனர்.


இதனால் பாடசாலை திருத்தி அமைக்கப்படுவதை அறிந்து கொண்ட  பக்கத்து விகாரையின் தேரர் அவர்கள்,  இதற்கு எதிராக தனது செயல்பாட்டை ஆரம்பித்தார். ஏற்கனவே ஞானசார தேரர் அவர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இவருக்கு இவ்விடயம் ஒரு அதிர்ஷ்டவசமாக அமைந்தது. 


மூடப்பட்ட பாடசாலையை ஒரு முஸ்லிம் பாடசாலைக்கு வழங்கக் கூடாது என்பதே இவரது போராட்டமாகும். இவ்விடத்தை பல வருடங்களுக்கு முதல் ஒரு பௌத்த தொண்டு நிறுவனம் பாடசாலைக்கு வழங்கி இருந்தாலும், எக்காலம் சென்றாலும் இது ஒரு பாடசாலைக்கே  வழங்கப்பட வேண்டும் என்பது இதை வழங்கியவர்களின் கோரிக்கையாகும். அதனால் இவரது போராட்டம் தோல்வியுற்றது.


வழங்கியவர்கள் ஒப்பந்தத்தில் இந்த இடத்தில்  ஒரு பாடசாலை மட்டுமே அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதால், அது பௌத்த பாடசாலை என்றோ, முஸ்லிம் பாடசாலை என்றோ, கிறிஸ்தவ பாடசாலை என்றோ குறிப்பிடப்படவில்லை. அதனால் இவரது முயற்சி அதிகாரபூர்வமாக, சட்டப்படி  தோல்வியடைந்தது.


இவர் இதை நிறுத்த பல இடங்களுக்குச் சென்ற போதிலும்,  இவரது வாதம் எடுபடவில்லை. நாம் இதை பாடசாலைக்கு வழங்கி இருக்கிறோம். பாடசாலைக்கு வழங்கும் அதிகாரம் கல்வி அமைச்சுக்கு உண்டு, அடுத்தபடியாக அரசாங்கத்திற்கு அன்பளிப்புச் செய்த ஒரு பொருளை திருப்பி எடுக்க முடியாது. அதன் அதிகாரம் அரசாங்கத்திற்கே உண்டு என்ற நிபந்தனையின் கீழ்  இவருக்கு அரச தரப்பில் இருந்து  பதிலளிக்கப்பட்டது. 


குறிப்பிட்ட தேரரின் அச்சுறுத்தல் இருந்ததனால்  போலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு செய்து விட்டு பாடசாலை ஆரம்பிக்க வேண்டுமென 

நல்லுள்ளம் படைத்தவர்கள், இதற்காக உழைத்தவர்கள், சட்டத்தரணிகள் அதிபருக்கு ஆலோசனை கூறிய போதிலும், அதிபர் இதில் சூட்சகமாக பின்வாங்கினார்.


இருந்தாலும் இது சம்பந்தமாக தெஹிவளை போலீசாரை  தொடர்பு கொண்டு விடயங்களை அறிவித்த போது, பாடசாலைக்கும் பிள்ளைகளுக்கும்  தாம் பாதுகாப்பளிப்பதாகவும், தேரர் அவர்களுக்கு அரச தீர்மானத்திற்கு மேலாக செயல்பட முடியாது எனவும். பாடசாலையை ஆரம்பிக்கும்படியும் போலீசார் தெரிவித்தனர்.


மேலும் இதுசம்பந்தமாக பிலியந்தலை வளையக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், 

"கல்விக் காரியாலயம் , அமைச்சு போன்றவை சட்டத்திற்கு அமையவாக பாடசாலையை உங்களுக்கு வழங்கியுள்ளது. இதன் பிறகு உங்கள் அதிபரின் கைகளிலே தங்கி உள்ளது"  என கூறி விட்டார்.


மேலும் இப்பிரச்சினையை  அறிந்து கொண்ட முஸ்லிம் சமூகத்தின் முக்கிய சட்டத்தரணிகள் பலர், அரச தீர்மானத்திற்கு எதிராக தேரர் அவர்களுக்கு செயல்பட முடியாது எனவும், பின் வாங்காமல் பாடசாலையை ஆரம்பிக்கும்படியும்,  இது சம்பந்தமாக நீதிமன்றம் என வரும்போது தாம் இலவசமாக,  சமூக நலனுக்கான முன்வர தயாராக இருப்பதாகவும் பின்வாங்க வேண்டாம் எனவும், போலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டை  செய்துவிட்டு பாடசாலையை ஆரம்பிக்கும்படியும் ஆலோசனை கூறினார்கள். 


மேலும் இக்குறிப்பிட்ட தேரர் தற்போது நீதிமன்ற பினையில் இருப்பதும் குறிப்படத்தக்கதாகும்.


ஆனால் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான எந்தவித முனைப்பையும் காட்டாத அதிபர் அவர்கள், பொலிஸ் நிலையம் செல்லவும் மறுத்தார். 


மேலும் இது சம்பந்தமாக அதிபர் என்ற வகையில் நிலமைகளை விளக்கி பாதுகாப்புத் தரும்படி IGP , DIG போன்றவர்களுக்கு கடிதம் ஒன்றை தருமாறும் நாம் நேரில் சென்று அதை கையளிக்கின்றோம் எனக் கூறிய போதும் அவர் அதற்கு இணங்கவில்லை.


இந்நிலையில்  ஐந்தாம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க இருந்ததனால், கல்கிசை வடரப்பொல  பள்ளிவாசலில் இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஒன்று 4 ஆம் திகதி  இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் முனீர் முலfபர் அவர்களும், பிரதி சபாநாயகர் Dr. ரிஸ்வி சாலி அவர்களும் பெற்றோர்களும், பள்ளிச் சங்க உறுப்பினர்களும் ( Mosques federation) கலந்து கொண்டனர். 


இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும், பெற்றோர்களும் பாடசாலையை ஆரம்பிக்கும்படியும், நாம் பின்வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், தாம் போலீஸ் பாதுகாப்பை பெற்று தருவதாகவும் வலியுறுத்தினர்.


ஆனால் இதற்கு மாறாக அதிபரும் பள்ளிச் சங்கத்தின் சில உறுப்பினர்களும் காரணமின்றி இதை மறுத்தனர்.  இனவாதிகள் கல் எறிவார்கள், இப்பகுதியில் பிரச்சனை ஒன்றை ஏற்படுத்த இது வாய்ப்பாக அமையும் என சில அர்த்தமற்ற எதிர்வாதங்களை முன் வைத்து பாடசாலை ஆரம்பிப்பததை தடுத்து நிறுத்தினர்.


இறுதியில் இவர்களின் கோழைத்தனத்தால் பாடசாலை ஆரம்பிப்பது கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிபர் அவர்களும் சில பள்ளிச் சங்க உறுப்பினர்களின் தாளத்திற்கு ஆட்டம் போட ஆரம்பித்தார்.


கல்வி அமைச்சு, பிலியந்தலை கல்விக் காரியாலயம் உத்தியோபூர்வமாக, சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாடசாலையை பொறுப்பாளித்த நிலையில், அரசியல் தலைமைகள் பாடசாலையை ஆரம்பியுங்கள் நாம் பின்வாங்கிய வேண்டியதில்லை எனக் கூறும் போதும், போலீசார் நாம் பாதுகாப்பு தருகிறோம் எனக் கூறும் போதும், சமூகத்தில் உள்ள தலைமை சட்டத்தரணிகள் பின் வாங்க வேண்டாம், சட்டப்படி அதிகாரப்படி உங்களிடம் தரப்பட்டுள்ளது.  நாம் இதற்காக இலவசமாக வழக்காட தயாராக இருக்கின்றோம் என்ற நிலையிலும், பாடசாலையை  ஆரம்பிப்பதற்கு பள்ளிச் சங்கத்தில் சில உறுப்பினர்களும் அதிபரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட சட்டபூர்வமான அதிகாரத்தின் படி தன் கடமையைச் செய்யாமல் பின்வாங்கியதன் பின்னணி என்ன ? 


இது சம்பந்தமாக அதிபர் அவர்களை தொடர்பு கொண்டு, நிலமை இவ்வளவு நம்பக்கம் சாதகமாக இருக்கும்போது, ஏன் பாடசாலையை ஆரம்பிக்கவில்லை என நான்  வினவிய போது    "பாடசாலையை ஆரம்பிக  பள்ளிச் சங்கம் விரும்பாமையினால் நாம் அதைப்பற்றி யோசித்து முடிவு செய்யவுள்ளோம்" எனத் தெரிவி்த்தார்.


அவ்வாறானால், பாடசாலை அதிபர் பாடசாலையை நடாத்திச் செல்வது பள்ளிச் சங்கம் கூறும் வகையிலா ,  அல்லது கல்வி அமைச்சின்,  கல்விக் காரியாலயத்தின் வழிகாட்டல்,  சட்டதிட்டங்களுக்கு அமைவாகவா என்பதை இவர் சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.


இந்த நாட்டில் ஆரம்பம் முதல் சில இனவாதிகள் அவ்வப்போது தலை எடுக்கின்றனர். இதற்காக அஞ்சி கோழைகளாக ஒதுங்கிச் செல்வதா ?  சட்டதிட்டங்களுக்கு அமைவாக,  சட்ட நடவடிக்கைகளை எடுத்து எமது உரிமையை பெற்றுக்கொள்வதா ? 


கடந்த காலங்களில் இதே தேரர் பக்கத்தில் உள்ள பாபக்கர் பள்ளி வாசல், பதிவு செய்யப்படாதது என்றும்,  அதை மூட வேண்டும் என்றும் பெரியளவில்  ஆர்ப்பாட்டம் செய்தார். போராட்டம் நடத்தினார் அது மூடப்பட்டதா ?


நழீமியாவை மூடும் படி நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், அதை மூடி விட்டார்களா ? மதரஸாக்களை மூடும் படி முழு நாட்டில் உள்ள இனவாதிகளும் ஒன்று சேர்ந்து கொக்கரித்தார்கள் மதரஸாக்களை  மூடிவிட்டார்களா ? காதி நீதிமன்றங்களை மூடும்படி ஆர்ப்பாட்டம் செய்தார்கள், அதனை மூடி விட்டோமா.  தலைக்கு மீறி ஆர்ப்பாட்டங்களும்  கூட்டங்களும் நடத்தினார்கள்.  இவை அத்தனையும் மூடப்பட்டு விட்டதா ? 


ஒரு இனவாதி கொக்கரித்தார் என்பதற்காக,  பள்ளி சங்கத்தின் சிலரும் அவர்களுடன் அதிபரும்  சேர்ந்து முழு சமூகத்தையும் தலைகுனிய வைத்து, பின் வாங்கியது முறைதானா?  இதன் பின்னணி என்ன ?


ஏனைய இன மக்களை போல் நாமும் இந்த நாட்டுப் பிரஜைகள். எமக்கும் கல்வி கற்கும் உறிமை ,  மற்றும் மத உரிமைகள்  உண்டு. ஒரு இனவாதி கொக்கரித்தார் என்பதற்காக அவருக்குப் பயந்து நமது உரிமைகளை லஞ்சமாக கொடுப்பதா ?  


இந்த நாட்டில் நாம் வாழ்வதற்கு எமது எந்த உரிமைகளையும் எந்த இனவாதிக்கும் லஞ்சமாக கொடுக்க வேண்டியதில்லை. இந்த நாட்டில் சகலருக்கும் சகல உரிமைகளும் இருக்கின்றன என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


இவர்கள் கோழைத்தனமாக பின் வாங்கியது இலங்கையின் முழு முஸ்லிம் சமூகத்தையும் தலை குனியச் செய்ததோடு, இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை  நடத்தி ஏனைய இனங்களின்  உரிமைகளை நசுக்கி விடலாம் என்ற ஒரு படிப்பினையையும் இது போன்ற இனவாதிகளுக்கு இவர்கள் கற்றுக் கொடுத்து விட்டார்கள் என்பதை இவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.


இன்று தெஹிவளைப் பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட தனியார் பாடசாலைகள் இயங்கி வருகின்றன.  தெஹிவளை பகுதியில் தனியார் பாடசாலைகள் உள்ளது போல், இலங்கையின்  எப்பகுதியிலும் தனியார் பாடசாலைகள் இல்லை. 

தெஹிவளைப்  பகுதியில் இன்று  முதலாளிமார்களுக்கான சிறந்த முதலீடு தனியார் பாடசாலை நிறுவுவதாகும். ஒவ்வொரு பாடசாலைகளிலும் சுமார்

500 க்கும் 1000 த்திற்கும் இடைப்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் மாணவர்கள் அளவில் பாடசாலைகள் இன்றி தனியார் பாடசாலைகளுக்கு செல்கின்றனர். 


தெஹிவளை தமிழ் வித்தியாலயம், நுகேகொடை தமிழ் வித்தியாலயம், பம்பலப்பிட்ட  இந்துக்கல்லூரி, ராமநாதன் இந்து கல்லூரி, போன்ற பல தமிழ் பாடசாலைகள் இருந்த போதிலும், அங்கு முஸ்லிம் மாணவர்கள் ஒரு சிலவர்களைத்தவிர மாணவர்கள்  அனுமதிக்கப்படுவதில்லை.  காரணம் நாட்டின் முஸ்லிம் பாடசாலைகள் என ஒதுக்கப்பட்டுள்ளது என்ற வாதமே அவர்கள் முன்வைக்கின்றார்கள். 


அவர்கள் புறத்தில் இது நியாயமே.  சுமார் பத்தாயிரம் மாணவர்களுக்கு பாடசாலை பற்றாக்குறையான நிலையில்,  இது பற்றி  எம் சமூகம் இன்னும் கண்டுகொள்ளாது இருக்கின்றததுடன், கிடைத்த பாடசாலையையும் பறி கொடுக்கும் நிலையில் உள்ளது.


தெஹிவளை வெவள்ளவத்தை பகுதி அடங்கலாக ஒரு தமிழ் தனியார்  இந்துப் பாடசாலை இல்லை.  அவர்களுக்குத் தேவையான பாடசாலை வசதிகளை அந்த சமூகம் செய்து வைத்துள்ளது. எதிர்காலத்தில் பாடசாலைகளில் ஏற்படும் இட நெருக்கடியை தவிர்க்க பல பெரிய காணிகளையும் தற்போது கொள்வனவு செய்து வைத்துள்ளனர்.


முஸ்லிம்கள் செரிந்து வாழும்  இப்பகுதிகளில்  சுமார் பத்தாயிரம் மாணவர்களுக்கு பாடசாலை பற்றாக்குறை எவர் கண்களுக்கும் தெரியவில்லை. முஸ்லிம் பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பது எவ்வாறானாலும் சட்டப்படி கிடைத்த பாடசாலையையும் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத,  இனவாதிகளுக்கு பயந்த கோழைகளாக எம் சமூகம் மாறி இருப்பது கவலைக்குறிய விடயமாகும்.


இந்நிலையில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள், கல்வி அமைச்சு, பிலியந்தலை கல்விக்காரியாலயம் , போலீஸ் பிரிவு, மற்றும் முதல் நிலையில் உள்ள முஸ்லிம் சட்டத்தரணிகள்  பாடசாலையின் பக்கம் சாதகமாக உள்ள நிலையில்,  எந்தவிதமான ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதாரண காரணங்களும் இன்றி,  பள்ளிச் சங்க உறுப்பினர்களும் அதிபரும்  ஒன்றிணைந்து இவ்விடயத்தில் பின் வாங்கியது கோழைத்தனமா ?  அல்லது தனியார் பாடசாலைகளுக்கு ஆதரவாக செய்யப்படும் சதித்திட்டமா என்பதை இவர்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்.


இப்பாடசாலை முஸ்லிம் பாடசாலைக்காக சட்டபூர்வமாக, அரச அதிகாரப்படி  ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஆரம்பம் செய்வதற்கு  திராணி இல்லாமல்,  இனவாதிகள் பாடசாலையை திறக்க விடுவதில்லை என சமூக வலைத்தளங்களில் ஒப்பாரி வைத்து ஓலமிடுவது ஒரு கோழைத்தனமான செயல் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் தற்போது பாடசாலையை ஆரம்பிக்கவென 

மீலாத் முஸ்லிம் வித்யாலயத்திலிருந்த கதிரிகளையும் மேசைகளையும் புதிய பாடசாலைக்கு எடுத்துச் சென்றதால்,  மாணவ மாணவிகள் தரையில் பாய்களை விரித்து  படிக்கின்றார்கள் என்பதும் ஒரு கவலைக்குரிய விடயமாகும். இது கோழைத்தனத்தால் வந்த வினையாகும். இத்தனைக்கும் அதிபரும் குறிப்பிட்ட பள்ளிச் சங்க உறுப்பினர்களுமே பதில் சொல்ல வேண்டும்.


இப்பாடசாலையை  முஸ்லிம் பாடசாலை வழங்குவதற்குஎதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதில் ஊர் மக்கள் யாரும் இருக்கவில்லை. இப்பாடசாலையைச் சூழ ஓரிரு மாற்று மதத்தவர்களைத் தவிர அனைத்து முஸ்லிம் குடும்பங்களுமே வாழ்கின்றனர். இதிலும்  இங்கு வாழும் ஓரிரு மாற்று மதத்தினரும் நல்ல பண்புள்ள மக்களாகவே காணப்படுகின்றனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சில இனவாத அரசியல்வாதிகளால் வெளிப்பகுதிகளிலிருந்து கூலிக்காக அழைத்து வரப்பட்டவர்கள். 


இது சம்பந்தமாக உதவி செய்ய  முன்வந்த சட்டத்தரணிகளை அணுகிய போது உறுதியற்ற அதிபருடன் இதை முன்னெடுத்துச் செல்வது முடியாத காரியம் எனவும்,  பாடசாலை என வரும்போது அதிபரின் முடிவே இறுதி தீர்மானம் எனவும்,  உறுதியற்ற அதிபருடன் இதில்  இறங்குவது ஆபத்தானது என கூறிவிட்டனர்.


மேலும் இவர்கள்விட்ட காலதாமதமான  பிழையினால்,  தற்போது

பொலிஸாரும்  சில அழுத்தங்கள் காரணமாக நெளிவு சுழிவுகளுக்கு உட்பட்டிருப்பதாகவும் அறிய கிடைத்தது.


இதுவரை பாடசாலை விடயத்தில் சட்டத்திற்கு சமாந்தரமாக செயல்பட்ட போலீசார்,  இரண்டு  தினங்களுக்கு முன்னர் அதிபரையும், வளையக்கல்வி பணிப்பாளரையும், சர்ச்சைக்குரிய தேரரையும் பொலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, பாடசாலையை திறக்க கூடாது என  அச்சுறுத்தியதாகவும் அறியக் கிடைத்தது. 


ஒரு பாடசாலை ஒன்றை திறக்கக் கூடாது என சொல்வதற்கு போலீசாருக்கு எந்த அதிகாரமும் இல்லை.  அரச தீர்மானத்துக்கு எதிராக செயல்படும், அரச தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுப்பவர்களை பாதுகாப்பதும், பாடசாலை விடயத்தில் தேரரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போலீசாரின் காரியம் அல்ல என்பதை அங்கு சென்றவர்கள்  எடுத்துக்காட்ட தவறியுள்ளனர்.


மேலும்  பாடசாலைக்கு சம்பந்தம் இல்லாத தேரருடன் எந்தப் பேச்சுவார்த்தைகளுக்கும் இவர்கள் சென்றிருக்கக் கூடாது.  இவ்விடயத்தில் கல்விக்காரியாலயம் பிழை செய்திருந்தால் இதை எதிர்ப்பவர்கள் காரியாலயத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்று சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர 

இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது  எமக்கு உரிய காரியம் அல்ல. இதை விடுத்து, தேரர் அரச கடமை செய்ய பங்கம் விழைவித்தார் என அதிபர் புஹார் செய்திருக்க வேண்டும்.


மேலும் இது  சம்பந்தமாக முஸ்லிம் சட்டத்தரிணிகளை அணுகியபோது,  இது எமது அடிப்படை உரிமை பிரச்சனை என்றும், நீதிமன்றம் சென்று,  நீதிமன்ற அனுமதியுடன் பாடசாலையை திறக்கலாம் என்றும் தெவித்தனர். எதற்கும் அதிபரின் ஆதரவு முக்கியமானதாகும்.


மேலும் புதிதாக கிடைத்த தகவல்களின் படி இன்னும் இரு வாரங்களில் நோன்பு விடுமுறைக்காக பாடசாலை மூடப்படுவதால்,  இரண்டு வாரங்கள் பொறுத்திருக்குமாரும் பின்னர் யோசிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது.

 

இப்பகுதியில் பாபக்கர் பள்ளிவாசல் பிரச்சனையின் போது, குறிப்பிட்ட இதே தேரர், பிரச்சினையாக உள்ளதால் பள்ளிவாசலை 10 நாட்களுக்கு மூடும் படியும்

பின்னர் யோசிப்போம் என்றும் வாதாடினார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு வினாடி கூட மூடுவதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அன்று பள்ளிவாசல் மூடப்பட்டு இருந்தால். இன்னும் பள்ளிவாசல் மூடப்பட்டிருக்கும். 

எனவே இதே நிலை இப்பாடசாலைக்கும் ஏற்படும் என்பதை இவர்கள் இன்று எழுதி வைத்துக் கொள்ளட்டும்.


இப்குதியில் பாடசாலை இன்றி தனியார் பாடசாலைகளுக்குச் செல்லும் சில பெற்றோர், ( தாய்மார் ) வீட்டு வேலைகளுக்குச் சென்று

தமது பிள்ளைகளுக்கான பணத்தை கட்டுகின்றார்கள். 


எனவே கிடைத்த பாடசாலையை ஆரம்பிக்க தெரியாமல் பெற்றோர்களிடம் பணத்தை வசூலித்து 27 லட்சங்களை செலவு செய்து விட்டு கோழைகளாக, அல்லது சதிகாரர்களாக செயற்படும்  இவர்கள் இந்த சமூக சாபத்திலிருந்து அல்லாஹ்விடம் பதில் கூற பொறுப்பானவர்கள் என்பதை நினைவில் வைத்திருக்கட்டும்.


-பேருவளை ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.