நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட மின்தடையால் செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் திருத்தப்பட்டு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அதற்கமைய 3 இயந்திரங்களும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடையால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன.
இதன் விளைவாக, தேசிய மின்கட்டமைப்பில் 900 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டது. நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காக கடந்த 10, 11 ஆகிய இரு தினங்களில் தலா ஒன்றரை மணிநேரமும், கடந்த 13ஆம் திகதி ஒரு மணிநேரமும் மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.
எவ்வாறாயினும் நேற்று (14) காலை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது இயந்திரமும் இயங்க ஆரம்பித்ததையடுத்து, இதன் காரணமாக நாளாந்த மின்வெட்டு முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக மின்சக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.