முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டு வாடகை நிலத்தின் பெறுமதி நீங்கலாக மாதாந்தம் 4.6 மில்லியன் ரூபாவாகும். முன்னாள் ஜனாதிபதிகள் குடியிருப்பை காலி செய்யவோ அல்லது வாடகையை தாங்களே செலுத்தவோ விருப்பம் உள்ளதாக அவர் கூறினார்.
"தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குடியிருப்பு அல்லது அவர்களது சம்பளத்தில் 1/3 பங்கு உரிமை உண்டு. அதனடிப்படையில் அரசாங்கம் இப்போது 30,000 ரூபாய் பண கொடுப்பனவாக மட்டுப்படுத்துகிறது, இது அவர்களின் சம்பளத்தில் 1/3 ஆகும்," என்று கட்டுகுருந்தவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி கூறினார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை தவிர்ந்த அனைத்து அமைச்சு பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்களுக்காக அல்லது வேறு பொருத்தமான பயன்பாட்டிற்காக மீளப் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)