கண்டி கெலிஓயா பிரதேசத்தில் 18 வயது பாடசாலை மாணவியான பாத்திமா ஹமீரா என்பவரை கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர், பாடசாலை மாணவியுடன் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் திங்கட்கிழமை (13) காலை இருந்த போது கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அம்பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (12) இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறித்த மாணவியை கடத்திய இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் பணி புரிந்ததாகவும், மாமாவிடம் தனது பணம் கொடுக்கப்பட்டதாகவும், பணத்தை தராததால் தான் இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கூறியுள்ளார்.
இதேவேளை கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.
பாறூக் ஷிஹான்