ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ., கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். பரிசுப் பொருட்கள் பெற்றதில் முறைகேடு, அரசு ரகசியங்களை கசிய விட்டது உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை, தனி நபர் அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு லஞ்சமாக பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு, ஊழலை தடுக்கும் பொறுப்பு நிறுவனமான, பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB), இந்த குற்றச்சாட்டை முன் வைத்தது.
இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி, தொழிலதிபர்கள் சிலர் மீது இந்த குற்றச்சாட்டு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 3 முறை தீர்ப்பு திகதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (17) இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
வழக்கில் தொடர்புடைய மற்ற அனைவரும் தலைமறைவு ஆகி விட்டனர். அவர்களை, தேடப்படும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.