முன்னர் ஊடகங்களின் சுதந்திரம், உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக வாதிட்ட அனுரகுமார திஸாநாயக்க தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்குவதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஊடகத்துறைக்கு ஊடக சுதந்திரம் குறித்து தற்போதைய ஜனாதிபதி அல்லது அரசியல்வாதிகளின் ஆலோசனைகள் தேவையில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் வலியுறுத்தினார்.
ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்தியுள்ளார்.
'ஊடக சுதந்திரம் மற்றும் ஒழுக்கம் பேணப்பட வேண்டும், ஆனால் அவை ஊடகங்களால் உருவாக்கப்பட்ட சுய கட்டுப்பாடு முறையின்படி பராமரிக்கப்பட வேண்டும். ஊடகங்களை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதிக்கின்றன' என்று அவர் கூறினார்.
ஊடகவியலாளர்களை கண்டித்து அறிவுரை வழங்குவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்த சஜித் பிரேமதாச, ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது குறித்த துறையின் பொறுப்பாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமக்கு எதிராக ஊடகங்கள் விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டிருந்த போதிலும், ஊடகங்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை எனவும், அவ்வாறு செய்வதற்கு தனக்கு உரிமை இல்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மத்திய கொழும்பில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கட்சியின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.