மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு, கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்து இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகளில் ஒருவரை 10 மில்லியன் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுமாறும் உத்தரவிட்டுள்ளது.