வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த உள்ளாடைகளையும் கூட அள்ளிச் சென்றது. ஒரு சிலரோ ஷேக் ஹசீனா வீட்டில் கொள்ளையடித்த சேலைகளை அங்கேயே அணிந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராடிய மாணவர்கள் பெயரிலான கும்பல்தான் இத்தகைய அட்டூழியங்களை செய்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா, கடந்த 16 ஆண்டுகள் அந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். வங்கதேச விடுதலைக்கு போராடியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு மாணவர்களின் பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இந்த புரட்சிதான் ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே கவிழ்த்துவிட்டது.
கடந்த சில மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. பாதுகாப்புத் தரப்பில் பலர் கொல்லப்பட்டதால் ஈவு இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதன் உச்சகட்டமாக ஷேக் ஹசீனா தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் ஷேக் ஹசீனாவின் மாளிகையை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் வன்முறை கும்பல் முற்றுகையிட்டதால் உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடி வந்தார். முதலில் திரிபுரா சென்ற ஷேக் ஹசீனா பின்னர் இந்திய விமானப் படை பாதுகாப்புடன் டெல்லி அருகே உள்ள காசியாபாத் விமான படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இதனிடையே டாக்காவில் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் அங்கிருந்த அத்தனை பொருட்களையும் ஒன்றுவிடாமல் கொள்ளையடித்துச் சென்றது. இதில் படுகேவலமாக ஷேக் ஹசீனா மாளிகையில் இருந்த உள்ளாடைகளையும் விட்டுவைக்கவில்லை.