இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து வேகப்பந்துவீச்சாளர் டில்சான் மதுசங்க உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
டில்சான் மதுசங்க இந்திய அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்ததுடன், அடுத்த இரண்டு போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பயிற்சியின் போது டில்சான் மதுசங்கவுக்கு தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டதன் காரணமாக இவர் ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக எசான் மாலிங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
எசான் மாலிங்க உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவரும் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ளார். இவர் LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் விளையாடியிருந்தார்.
எசான் மாலிங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இவருடன் மொஹமட் சிராஸ் இலங்கை ஒருநாள் அணிக்கு முதன்முறையாக அழைக்கப்பட்டுள்ளார். இவர் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்த மதீஷ பதிரணவுக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியை பொருத்தவரை இந்தியாவுக்கு எதிரான தொடர் ஆரம்பத்திலிருந்து உபாதை மற்றும் சகயீனம் காரணமாக துஷ்மந்த சமீர, நுவான் துஷார, டில்சான் மதுசங்க, பினுர பெர்னாண்டோ மற்றும் மதீஷ பதிரண ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையில், குசல் ஜனித், பிரமோத் மதுஷன் மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.