இஸ்லாம் மார்க்கத்தையும், அல்லாஹ்வையும் கொச்சைப்படுத்தியதற்காக, நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு, சிறை தண்டனை அனுபவித்து வரும் ஞானஸார தேரர் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என, கண்டியில் உள்ள முக்கிய பௌத்த ஆலயம் ஒன்றில், முக்கிய பௌத்த மதத் தலைவர்களுக்கு மத்தியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு ஞானசார தேரர் அவர்களை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன் படி ஜனாபதியிடம் கோரிக்கை ஒன்று முன் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், இது விடயத்தில் தனக்கு தனித்து முடிவெடுக்க முடியாது எனவும், இது சம்பந்தமாக வழக்குடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் விருப்பக்கடிதம் எடுத்து வரும்படியும், அப்போது தான் மன்னிப்பு தருவதாகவும் கூறப்பட்டதாக அறிய முடிந்தது.
இது சம்பந்தமாக ஒரு குழு ஞானசார தேரரின் வழக்குடன் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களை சந்திக்க சென்றதாக அறிய கிடைத்தது.
இது விடயத்தில் முஜிபுர் ரஹ்மான் அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது, சில முக்கியஸ்தர்கள் தன்னை வந்து சந்தித்ததாகவும், ஞானஸார தேரர் அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என எனக்கு எந்தத் தேவையும் இல்லை. அவர் சிறையில் வாடுவதை தான் விரும்பவும் இல்லை. அவர் பிழை செய்தார், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் சமூகத்திற்கு நாம் பொறுப்புக் கூற வேண்டும். முஸ்லிம் சமூகம் எம் மீதே விரல் நீட்டுகின்றன. இதற்காக சமூகத்திற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். எனவே அவர் பிழை செய்தார். செய்த பிழைக்காக நாம் முறைப்பாடு செய்தோம். நீதிமன்றம் இதனை விசாரித்து, அவர் குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு தீர்ப்பு வழங்கியது. இது நான் வழங்கிய தீர்பு அல்ல, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
எனவே இது விடயத்தில் தான் மாத்திரம் அல்ல. இன்னும் சிலர் உள்ளனர். எனவே இது சமூக பிரச்சினை என்பதால் எனது இஷ்டப்படி தனித்து செயல்பட முடியாது. மேலும் இது சம்பந்தமாக ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் உள்ளதால் அவரின் அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு மன்னிப்பு வழங்க முடியும்.
இது விடயத்தில் தனது விருப்பக் கடிதம் அவசியமில்லை. தன் இஷ்டப்படி விருப்பக் கடிதம் தரவும் முடியாது. இது விடயத்தில் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது அவருக்கு முடிவெடுக்க முடியும். மேலும் தான் மட்டுமே இதில் சம்பந்தப்படவில்லை, பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். உண்மையும் அதுதான் எனக் கூறியதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இவர்கள், முன்னை நாள் ஆளுநர் அஸாத் சாலி அவர்களிடம் சென்றதாக அறிய கிடைத்தது.
இது தொடர்பாக ஆளுனர் அஸாத் ஸாலி அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது, இது சம்பந்தமாக சிலர் தன்னிடம் வந்து கதைத்ததாகவும், இது விடயத்தில் தான் மாத்திரம் சம்பந்தப்படவில்லை. தன் இஷ்டப்படி தனித்து செயல்பட முடியாது. தான் இது சம்பந்தமாக இரகசிய போலீசாரிடம் முறைப்பாடு செய்த போது, ஒரு சமூகப் பிரச்சினை என்ற ரீதியில் தனிநபரின் முறைப்பாட்டை விசாரிக்க முடியாது, இது ஒரு சமூகப் பிரச்சினை என்பதால், இதில் ஒரு சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் பலர் சம்பந்தப்பட வேண்டும் என அவர்கள் தனக்கு கூறியதாகவும், இதைத்தொடர்ந்து இன்னும் பலர் முறைப்பாடு செய்ததாகவும், எனவே பல சமூக பிரதிநிதிகள் சம்பந்தப்படும் ஒரு சமூக விடயத்தில் தனது சுய விருப்பத்தின்படி விருப்பக் கடிதம் தரவும் முடியாது. எனவே இது தொடர்பாக முறைப்பாட்டாளர்களான முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதுருதியின் மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பாக அகில இலங்கை ஜமியத்துல் உலாமா போன்றவற்றின் விருப்பங்கள் தேவை எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர்கள் அகில இலங்கை ஜம்மியத்தில் உலமாவை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், இதற்கான பேச்சுவார்த்தைக்கு அகில இலங்கை ஜமியத்துல் உலமா சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும் அறியக் கிடைத்தது.
-பேருவளை ஹில்மி