எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு மேலும் ஆறு வருடங்கள் கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 2023 இல், மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் அரசாங்க அதிகாரிகள் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் 2019 ஈஸ்டரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
முன்னதாக புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவித்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அப்போது, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சிறிசேன ரூ.100 மில்லியனும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ரூ.50 மில்லியனும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பலர் தாக்கல் செய்த 12 மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நட்டஈடு தொடர்பான அனைத்து வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்குமாறு கோரி மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனுவை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.