திங்கட்கிழமை (08) மற்றும் செவ்வாய்க்கிழமை (09) கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்புக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்கால பதவி உயர்வுகளுக்காக உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குமாறும் ஜனாதிபதியின் பிரேரணையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 200 பொதுத்துறை தொழிற்சங்கங்கள் இணைந்து இரண்டு நாள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தபால், கிராம உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள், சமுர்த்தி, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கல்வி அதிகாரிகள் உட்பட பல தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். (யாழ் நியூஸ்)