முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரி, பேரணி நடைபெற்ற இடத்திலிருந்து 400 அடி தூரத்தில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்தே தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
டிரம்ப் மீது தாக்குதல் மேற்கொண்டவர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயதுடைய இளைஞர் என நியூயார்க் போஸ்ட் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
உடனடியாகச் செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றுள்ளதுடன் அவர் தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டுக் கூலிப்படையைச் சேர்ந்தவரா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப்புடன் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசி மூலம் உரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் பேரணியில் பங்கேற்ற டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில் அதிர்ச்சியையும் நிம்மதியையும் வெளிப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளதற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களும் அரசியல் வன்முறைகளை அனுபவித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் வலியுறுத்தினார்.