3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்திருந்த பிணை மனு இன்று (22) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு தெமட்டகொடையில் டிபென்டரைப் பயன்படுத்தி இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொடை பகுதிக்கு கறுப்பு நிற டிஃபென்டர் ஜீப்பில் வந்த சிலர் தம்மை கடத்திச் சென்று தாக்கியதாக பாதிக்கப்பட்ட அமில பிரியங்கர தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த ஹிருணிகா பிரேமச்சந்திர, சம்பவம் நடந்த போது தான் ஒரு நிகழ்வில் இருந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட நபர், நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும் அவருடைய அனுமதியின்றி அவளது டிஃபென்டரைக் கைப்பற்றி, அந்தச் சம்பவத்தில் குறித்த நபர் அதைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)