கொழும்பு கொழும்பு கொம்பனி வீதியில் இரண்டு மாணவர்கள் தொடர்மாடியொன்றிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் இது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் அவர்களின் முகபாவங்கள் நடமாட்டங்களை காண்பிக்கும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து இது தற்கொலையா என்ற முடிவிற்கு வரமுடியவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் பிரபலமான பாடசாலையில் ஒரே வகுப்பில் கற்ற இருவரும் மாலை 2.40 அளவில் பாடசாலை சீருடையுடன் அந்த தொடர்மாடிக்கு முச்சக்கரவண்டியில் சென்று இறங்கியுள்ளனர்.
மாணவி அல்டையரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு 61 மாடியில் உள்ள தனது நண்பியை சந்திக்க செல்வதாக தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் தெரிவித்த முகவரியை தொடர்புகொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அங்கு அவர் தெரிவித்தது போல எவரும் இல்லை என தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் அடிக்கடி அந்த தொடர்மாடிக்கு வந்துள்ளதால் அவர்களை செல்வதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனுமதித்துள்ளனர்.
இதன் பின்னர் அவர்கள் ஐந்தாம் மாடிக்கு சென்று, அங்கு தங்கள் ஆடைகளை மாற்றியக்கொண்டு அங்குள்ள ஜிம்மை பயன்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் அந்த மாணவன் மோட்டார் சைக்கிளில் வழங்கப்பட்ட பொதியை பெறுவதற்காக கீழே சென்று பின்னர் ஐந்தாம் மாடிக்கு திரும்பிச்சென்றமை சிசிடிவியில் பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலை 4.30 மணியளவில் இருவரும் 67வது மாடிக்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸார், அவசரமாக வெளியேறுவதற்கான பகுதியின் கதவை திறந்தே இவர்கள் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் உள்ள சிறிய சுவர் போன்ற ஒன்றில் அமர்ந்திருந்ததை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் நண்பர் ஒருவர் 61 வது மாடியில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அட்டயரில் 70 மாடிகள் உள்ள போதிலும் வெளியாட்கள் 67மாடிக்கு அப்பால் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ள பொலிஸார் உயிரிழந்தவர்களின் காலணிகள் அவசர சூழ்நிலையில் வெளியேறுவதற்கான வாசலிற்கு செல்லும் மாடிப்படிக்கு அருகில் காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களின் உடல்கள் குளிர்ஊட்டிகள் பாதுகாக்கப்படும் 3ஆம் மாடிக்கு அருகில் காணப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
திறந்த படிக்கட்டுகளிற்கு அப்பால் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அவர்கள் எப்படி மூன்றாம் மாடியில் விழுந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.