பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு பாதாள அறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமியை புத்தல பொலிஸார் நேற்று (12) மீட்டுள்ளனர்.
சிறுமியை அவரது காதலன் என்று கூறப்படும் 20 வயது இளைஞன் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தல, கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றுக்கு கடந்த 9ஆம் திகதி இரவு வந்த மூன்று இளைஞர்கள் அங்கு உறங்கிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது கடத்தலை தடுக்க முயன்ற சிறுமியின் தந்தையின் கையை இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சிறுமியின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் கடத்தப்பட்ட சிறுமியை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும், நீண்ட விசாரணையின் போது, பிரதான சந்தேகநபருடன் சிறுமியை கடத்த வந்த மற்றைய இரு இளைஞர்களையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அதன்படி, இரு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், கடத்தப்பட்ட சிறுமியை புத்தல புறநகர் பகுதியில் உள்ள பிரதான சந்தேகநபரின் மாமாவின் வீட்டின் பாதாள அறை ஒன்றில் அடைத்து வைத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
அதன்படி, புத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜயதிலக பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டிற்கு விரைவாகச் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டுள்ளனர்.
சிறுமியை மறைப்பதற்காக இந்த பாதாள அறை, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தயார் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்து அடி உயரமும், ஆறு அடி அகலமும் கொண்ட இந்த அறையின் காற்றோட்டத்திற்காக இரண்டு சிறிய துளைகள் மட்டுமே இருந்துள்ளது.
பின்னர் இதற்கு உதவி வழங்கிய வீட்டின் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.
அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேகநபர்களை இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கடத்தப்பட்ட 14 வயது சிறுமியின் மூத்த சகோதரியுடன் இதற்கு முன்னர் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல சந்தர்ப்பங்களில் தன்னுடன் வருமாறு அந்த இளைஞர் முன்வைத்த கோரிக்கைகளை மூத்த சகோதரி மறுத்த பிறகு, அவரது உறவை நிறுத்திவிட்டு கடத்தப்பட்ட 14 வயது சிறுமியுடன் தனது காதல் உறவைத் தொடங்கியுள்ளார்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், சந்தேக நபர் சிறுமியை பலவந்தமாக அழைத்துச் சென்றதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.