அனுராதபுரம் கஹட்டகஸ்திரிய ஜமாலியா அரபிக் கல்லூரியில் மாணவர் ஒருவரை மிகவும் மோசமாக தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்ட இரு மௌலவிகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, மதரஸாவின் அதிபர் மற்றும் நிருவாகம் அறியாத வகையில் பாதிக்கப்பட்ட மாணவரை தனியான ஒரு அறையில் வைத்து, இரு மௌலவிகள் தாக்கியதாகவும், மாணவன் ஜூப்பா அணிந்திருந்ததால் நிர்வாகம் இதை அறியவில்லை என்றும், இது தொடர்பாக மாணவனின் குடும்பத்தினர் மதரஸாவில் புகார் செய்தபோதே நிர்வாகம் இதை அறிந்ததாகவும், மதரஸாவின் பேரையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு உடனடியாக மதரசஸா நிர்வாகம் சம்பந்தப்பட்ட இரு மெளலவிகளையும் போலீசில் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கலாச்சார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்த போது, பாதிக்கப்பட்ட மாணவருக்கு நட்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், மதரஸாவையும் அதன் பெயரையும் பாதுகாக்கும் விதமாக இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, அமைச்சுரீதியில் விசாரணைகளை நடத்த பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மதரஸாக்களை பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அவ்வப்போது நடவடிக்கை எடுக்க முனைப்புடன் செயல்படுவதாகவும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்கும் சமூக தொண்டர்கள் தொடர்பில் நன்றி தெரிவித்தார்.
-பேருவளை ஹில்மி