திருகோணமலை சாஹிரா கல்லூரியின் மாணவிகள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மண்டபத்தில் பரீட்சை மேற்பார்வையாளர் அதி கவனத்துடன் செயற்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இடைநிறுத்தப்பட்டுள்ள அந்த மாணவிகளின் பெறுபேறுகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் கல்வி அமைச்சரிடம் கோரிக்கையை முன்வைத்து கூறுகையில்,
திருகோணமாலை சாஹிரா கல்லூரியின் உயர்தர பரீட்சை பெறுபேறு இன்னும் வெளியாகவில்லை. 70 மாணவிகளின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்படாது இருக்கின்றன. அவற்றை கூடிய விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த வாரத்தில் இதனை செய்வதாக கல்வி அமைச்சர் கூறினார். இது குறித்து விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கையில், பரீட்சை மண்டபத்திற்குள் வரும் போது பர்தா அணிந்திருந்தால் காது தெரியும்படியே அணிந்திருக்க வேண்டும். அதற்கு காரணங்கள் உள்ளன. அவற்றை வெளிப்படையாக கூறப் போவதில்லை. அவ்வாறு நடக்கும் இடங்கள் உள்ளன. ஆனால் அந்த நேரத்தில் அவ்வாறு நடக்கவில்லை. யாரோ ஒரு மேற்பார்வையாளர் அதி கவனமாக செயற்பட்டுள்ளார். எனினும், அந்த மாணவிகளின் பெறுபேறுகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. இப்போது அந்தப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பரீட்சைகள் ஆணையாளர் அவற்றை எதிர்வரும் நாட்களில் வெளியிட நடவடிக்கை எடுப்பார் என்றார்.