தமது தொழிலாளர்களுக்கு புதிதாக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளமான 1700 ரூபாவை வழங்காத தோட்டக் கம்பனிகள் அரசாங்கத்தினால் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் அடுத்த மாதம் முதல் அனைத்து தோட்ட முதலாளிகளாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
சிறு தேயிலை உடமையாளர்கள் ஏற்கனவே தமது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை விட அதிகமாக செலுத்தி வருவதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், அரசாங்கத்திடம் இருந்து தனியாருக்கு மாற்றப்பட்டுள்ள உள்ளூர் தோட்டக் கம்பனிகளின் சம்பளப் பிரச்சினை இன்னும் தொடர்கிறது என்றார்.
குறைந்தபட்ச சம்பளத்தை அமுல்படுத்தாத தோட்ட கம்பனிகளை பொறுப்பேற்கும் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)