இன்று (26) இரவு 11.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள "ரெமல்" என்ற புயல் இன்று அதிகாலை 05.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது இலங்கையின் வடகிழக்கில் 19.5°N மற்றும் 89.3°Eக்கு அருகில், காங்கேசன்துறையிலிருந்து 1500 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இது இன்று நள்ளிரவில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க (இந்தியா) கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில், இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளிலும், தென்கிழக்கு அரேபிய கடல் பகுதிகளிலும், வங்காள விரிகுடா கடல் பகுதிகளிலும், 60-70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே குறித்த பகுதியில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.