குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா மாவா சாலையில் சிறுவர்களுக்கான விளையாட்டு மையம் அமைந்துள்ளது. அதில், நேற்று வார விடுமுறையை ஒட்டி குழந்தைகள், சிறுவர்கள் என ஏராளமானோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு தற்காலிக கட்டடம் சரிந்து விழுந்தது.
தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், 9 குழந்தைகள் உட்பட 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை குஜராத் மாநில அரசு அமைத்துள்ளது.
மேலும், விளையாட்டு மையத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த தீ விபத்திற்கு அந்த தற்காலிக கட்டடத்தில் நடந்த கட்டுமானப் பணியும் ஒரு காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கு வெல்டிங் வேலை நடந்து வந்த இடத்தில் தீப்பிடித்ததாக உயிர்தப்பியவர்கள் கூறியுள்ளனர். அத்தோடு, கட்டுமானப் பணிக்கான மரக்கட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அங்குள்ள ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி அணைக்க முயற்சித்தபோதும் தீ கட்டுக்குள் வரவில்லை என கூறப்படுகிறது.
இரு தளங்களைக் கொண்ட விளையாட்டு அரங்கில் தீப்பிடித்தபோது 80 பேர் வரை இருந்துள்ளனர். தீயுடன் கடுமையான புகையும் சூழ்ந்ததால் முதல் தளத்திற்கு இறங்க முடியாமல் பலர் சிக்கிக் கொண்டதாக தீ விபத்தில் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
-இந்திய ஊடகம்