முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு பயணமானார்.
மைத்திரிபால சிறிசேன தாய்லாந்தின் தலைநகர் பேங்கொங் நகரை நோக்கி இன்று (09) அதிகாலை 1 மணியளவில் தாய் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான TG308 என்ற விமானத்தில் புறப்பட்டார்.
மைத்திரிபால சிறிசேனவுடன் 09 பேர் அடங்கிய குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொள்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் முறைப்பாட்டையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலிட்பீரோ நேற்று கூடியது.
அதன் பின்னர், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர், கட்சித் தலைவருக்கு அத்தகைய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் இருப்பதால், பொலிட்பீரோ கூட்டத்தை கூட்ட முடியாது என்றும், ஆனால் நீதிமன்ற உத்தரவு காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இப்போது தலைவர் இல்லை என்றும் கூறியது.
பொலிட்பீரோ கூட்டமும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நியமனங்களும் சட்டவிரோதமானது எனக் கூறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பினர், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.