கடந்த 2019 இல் கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கியது போன்ற ஆதரவை தனக்கு வழங்கவேண்டும் என அனுரகுமார திசநாயக்க வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுவீடனின் ஸ்டொக்ஹோமில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறுவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கினார்கள் என தெரிவித்துள்ள அவர், இம்முறை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரதான தெரிவாக தேசிய மக்கள் சக்தி காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் தற்போது அமைப்பு மாற்றத்திற்காகவும் புதிய இலங்கைக்காகவும் பரப்புரை செய்கின்றார்கள் அவர்களின் தெரிவாக தேசிய மக்கள் சக்தி காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வந்து எங்களிற்காக பரப்புரை செய்யுங்கள் அல்லது எங்களின் ஆதரவை அதிகரிப்பதற்காக இணையவழி பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள குடும்பத்தவர்கள் தொலைபேசிகள் மூலம் உங்களை தொடர்புகொள்ளும்போது அவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மிக முக்கியமான சக்தியாக காணப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.