ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்குகளும் பாரியளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம், பங்குகள் போன்றவற்றில் இது பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டொலர்களாக ஆக உள்ளது.
கடந்த வார இறுதியில் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்று சர்வதேச ஊடகமான பிபிசி குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் மோதல் போக்குகள் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் என்று முதலீட்டாளர்கள் கவலைப்படுகிறார்கள்.
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயை உலக நாடுகள் பெரிதும் நம்பியிருப்பதால், எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்கள் உலகம் முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
மத்திய கிழக்கில் அதிகரித்திருக்கும் பதற்றங்கள் காரணமாக ஏற்கனவே ஓமன் மற்றும் இரான் இடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20% இந்த வழியாகவே நடப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளாம சவூதி அரேபியா, இரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் இராக் இந்த ஜலசந்தி வழியாகவே தாம் ஏற்றுமதி செய்யும் எண்ணெயை அனுப்புகின்றன.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, இரான் உலகின் ஏழாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும், ஓபெக்கின் மூன்றாவது பெரிய உறுப்பினராகவும் உள்ளது.