சஹ்ரானின் கொள்கைகளை கொண்ட ஐயாயிரம் பேராவது இங்கு இருக்கலாம். இங்கிருந்து ஐ.எஸ்.அமைப்புடன் சென்று போராடுபவர்கள் இல்லையென கூற முடியுமா? என்று அபே ஜனபல கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறான செயலில் ஈடுபடுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வரும் சூழ்ச்சி என்றும், இதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என்று தற்போது பொறுப்புவாய்ந்த மதத் தலைவர்கள் கூறுகின்றனர்.
கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் தவறுகள் வேறு கதையாகும். ஆனால் இதனை கோட்டாபய ராஜபக்ஷவின் சூழ்ச்சி என்று கூறுவதற்கு இந்த பாராளுமன்றத்தில் முயற்சிக்கப்படுமாக இருந்தால், இந்த பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கான சூழ்ச்சியாகவே பார்க்க வேண்டும். அவர் இதனை தெரிந்துகொண்டிருந்தார் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை 95 வீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாசித்திருக்க மாட்டார்கள். ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் இந்தியா தொடர்புபட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதில் இந்தியா இருப்பதாக கூற முடியாவிட்டாலும் சர்வதேச தொடர்புகள் இதன்பின்னால் உள்ளது என்று கூறலாம்.
எவ்வாறாயினும் சஹ்ரானின் கொள்கைகளை கொண்ட ஐயாயிரம் பேராவது இங்கு இருக்கலாம். இங்கிருந்து ஐ.எஸ். அமைப்புடன் சென்று போராடுபவர்கள் இல்லையென கூற முடியுமா? இதனை கோட்டாபய ராஜபக்ஷவின் சூழ்ச்சியென கூறிக்கொண்டு இருக்காது இந்த சம்பவத்தின் பின்னால் இருக்கும் விடயங்கள் என்ன என்று ஆராய வேண்டும் என்றார்.