வழக்கு ஆவணத்தில் உள்ள ஆவணத்தை மென்று அழித்து, வழக்கறிஞர் தொழிலுக்கு ஒவ்வாத வகையில் நடந்து கொண்ட பெண் வழக்கறிஞரை, வழக்கு முடியும் வரை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.
12 வருடங்களாக சட்டத்தரணியாக கடமையாற்றிய பிரதிவாதி சட்டத்தரணியின் செயற்பாடு பாரதூரமான நடவடிக்கையாக கருதப்பட வேண்டுமென பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிக்கு எதிராக தொழில் நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர மற்றும் ஏ.எச்.எம்.டி., நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
கெக்கிராவ நீதவான் நீதிமன்ற பதிவாளர் காரியாலயத்தில் உள்ள வழக்கு ஆவணமொன்றை வலுக்கட்டாயமாக எடுத்து வாயில் போட்டு அழித்ததன் மூலம் சட்டத்தரணிக்கு தகாத வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில், பிரதிவாதி சட்டத்தரணிக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை முன்வைத்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழு, தொழில் நெறிமுறைகளை மீறியதாக வழக்குரைஞருக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 02ஆம் திகதி விசாரிப்பதற்கு உத்தரவிட்டார்.