பாடசாலை ஆசிரியர் ஒருவர் மரக்கறி தோட்டம் ஒன்றில் மின்சார கம்பியில் சிக்கிய நிலையில் இன்று (16) சடலமாக மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பாமஸ்டன் தமிழ் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றும் பாமஸ்டன் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்டவருமான கே. விஸ்வநாதன் (வயது 58) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தமது வீட்டுக்கு அருகிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை கண்ட பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலையின் பிரதம வைத்தியர் தெரிவித்தார்.
இது தொடர்பாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி அசேல சுரஞ்சித் கூறுகையில், வைத்தியசாலைக்குக் கொண்டுவரும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.