ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியை கொலை செய்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றத்தின் ஊடாக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியைக் கொன்ற சந்தேகநபர் தும்பறை சிறைச்சாலை அதிகாரிகளினால் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளிடம் இன்று (09) ஒப்படைக்கப்பட்டார்.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மொஹிதீன் பாவா லபீர் (வயது 47) என்பவரே சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக ஹட்டன் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
09.12.2023 அன்று அதிகாலை ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலுக்குள் நுழைந்த சந்தேக நபர் அங்கிருந்த காவலாளியைக் கொன்றுவிட்டு பள்ளிவாசலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
அவர் ஜும்மா பள்ளிவாசலுக்கு வந்த போது, பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராக்கள் ஊடாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் வெளியிடப்பட்டனர்.
அதன்பின்னர், சந்தேகநபர் 19.12.2023 அன்று இரவு சம்மாந்துறை நகரில் சுற்றித்திரிந்துள்ளார். அவரை கைது செய்த சம்மாந்துறை பொலிஸார், சம்பாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், இது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
ஹட்டன் பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு நீதவான் விடுத்த வேண்டுகோளின் பேரில் தும்பரை சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றுக்கு சந்தேகநபர் அழைத்து வரப்பட்டார்.
சந்தேகநபர் 2022 ஆம் ஆண்டு சாய்ந்துமருது மற்றும் பொத்துவில் பல கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் 2023.07.2023 அன்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்தார்.
சந்தேகநபர் 06.12.2023 அன்று ஹட்டன் பகுதிக்கு வந்து ஹட்டனில் உள்ள பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார். மூன்று நாட்கள் இரவும் பகலும் அப்பகுதியில் தங்கியிருந்த அவர், கடந்த 09.12.2023 அன்று காலை ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலுக்குள் நுழைந்து அங்கிருந்த காவலாளியை கொன்று பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்..
காவலாளியை கொல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இரும்பு கம்பியை ஹட்டன் புகையிரதப் பாதையில் சி எறிந்ததாக சந்தேகநபர் அளித்த வாக்குமூலத்தின் பிரகாரம், ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இரும்பு கம்பியை ஆதாரமாகக் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட ஹட்டன் காவற்துறையினர், ஹட்டன் பகுதியில் தங்கியிருந்த பல இடங்களையும் கொலைக்காக ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலுக்கு வந்த வழியையும் சந்தேகநபர் காட்டியுள்ளனர்.