ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய செங்கடல் மற்றும் அதனை அண்மித்த பிராந்தியத்திற்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்பிவைக்க தயார் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்கள் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் Prosperity Guardian நடவடிக்கையில் இணைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கேப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
கப்பலை அனுப்பிவைக்க வேண்டிய திகதி தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
செங்கடலை அண்மித்த அரபுக்கடல், கல்ஃப் கடல் உள்ளிட்ட பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் Prosperity Guardian நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த கப்பலை அனுப்புவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், இந்த விவகாரம் அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ தொடர்புடையது அல்ல என்றும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கவே என்றும் கூறினார்.
இலங்கையின் வணிகக் கப்பல்கள் செங்கடலைத் தவிர்த்து, தென்னாபிரிக்கக் கரையோரப் பகுதியைப் பயன்படுத்தினால், அது பொருட்களின் விலைகளில் கடுமையான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் விளக்கினார்.
இந்நிலைமை இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இதற்காக கடற்படைக் கப்பலை அனுப்புவதற்கு அரசாங்கத்தினால் விசேட செலவு எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
இலங்கையைச் சூழவுள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள், மனித மற்றும் ஆயுதக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இதேபோன்ற கப்பல்களை அனுப்புவது நடைமுறையில் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.