2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான i மற்றும் ii வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியரை கைது செய்துள்ளது.
52 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்களை தனது வீட்டில் வைத்து அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் விவசாய விஞ்ஞானம் I வினாத்தாள் கேள்விகளை ஜனவரி 08ஆம் திகதியும், விவசாய விஞ்ஞானம் II வினாத்தாள் கேள்விகளை 2024 ஜனவரி 10 ஆம் திகதியும் வெளியிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் உயர்தரப் பரீட்சையில் விவசாய விஞ்ஞானப்பிரிவின் இரண்டாம் பகுதிக்கான விசேட பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.