நாளொன்றுக்கு சுமார் 10 மில்லியன் ரூபாய் நஷ்டத்தைக் குறைக்கும் வகையில், அரசுப் பேருந்துகளுக்கு இலத்திரனியல் அட்டை அல்லது QR குறியீடு இயக்கப்பட்ட கட்டண முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பயணச்சீட்டுகளுக்கு பணம் செலுத்துவதற்கு இலத்திரனியல் அட்டை அல்லது QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) புதிய இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறை திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சில பஸ் ஓட்டுநர்கள் அல்லது கண்டக்டர்களால் அன்றைய மொத்த வருமானம் அந்தந்த டிப்போக்களுக்குத் ஒப்படைப்பதில்லை. இதனால் ஒரு டிப்போ ஒன்றுக்கு ஒரு நாளைக்கு சுமார் 10 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலத்திரனியல் அட்டை அல்லது QR குறியீட்டு முறைமையுடன் கூடிய பணம் செலுத்தும் முறை சுமார் இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
2023 நவம்பரில் SLTB க்காக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது, இது 2024 இல் செயல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)