இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம் எடுத்த சூரியனின் முதல் முழு வட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரோ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சூரியனின் முழுமையான விட்டத்தைக் காட்டும் புகைப்படங்கள் எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) கருவி 200 முதல் 400 nm அலைநீள வரம்பில் குறித்த புகைப்படங்களை எடுத்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
குறித்த தொழில்நுட்பக் கருவியானது சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர் அலைநீளங்களை புகைப்படமெடுத்து அனுப்பியுள்ளது.
இந்த புகைப்படங்கள் மற்றும் தரவுகளை வைத்து இஸ்ரோ பல்வேறு ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூரியனின் வளிமண்டலம் மற்றும் வெளிப்புறத்தை ஆய்வு செய்ய கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.