ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் 8 வயதுடைய இலங்கைச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 49 வயதான இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஒரு இந்திய நாட்டவர் என்றும் அவர் தச்சுத் தொழில் செய்பவர் என்றும் சவூதி அரேபியாவில் இருந்து இலங்கை ஊடாக இந்தியா செல்ல இருந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் நேற்று (13) காலை சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவிசாவளையில் வசிக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயும், சவூதி அரேபியாவில் பணிபுரியும் அவரது தந்தையைப் பார்த்துவிட்டு விமானத்தில் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது மகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பெண் விமானத்தில் இருந்த கேபின் பணியாளர்களுக்கு தகவல் வழங்கியிருந்தார்.
இலங்கையை அடைந்ததும், சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபரையும் பாதிக்கப்பட்ட சிறுமியையும் மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)