பன்னல பகுதியில் போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை வழங்கும் பாரியளவிலான மோசடியில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து இரண்டு இளம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்னல எலபடகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் புதன்கிழமை (20) வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 23 வயதுடைய பன்னல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
எலபடகம பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், நீண்டகாலமாக போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்தமை விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 3 மடிக்கணினிகள், 8 பிரிண்டர்கள், இரண்டு கைத்தொலைபேசிகள், இரண்டு பென் டிரைவ்கள், இரண்டு காசோலை இயந்திரங்கள், ஒரு UPS, 24 கடவுச்சீட்டுகள் மற்றும் பல உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)