வீட்டுக்கு வீடு பொருட்கள் விநியோகம் செய்யும் முறையான 'Door to Door' முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது .
இம்முறையின் ஊடாக, வெளிநாட்டிலுள்ள நபர்கள் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் சரக்கு போக்குவரத்து முகவர் நிலையங்கள் ஊடாக உரிய நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
எவ்வாறாயினும், தொடர்ச்சியான பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கருத்திற்கொண்டு, 'Door to Door' விநியோக முறையில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளதாக, இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, டிசம்பர் 01ஆம் திகதி முதல் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பொருட்களை, இந்த முறை மூலம் அனுப்ப முடியாது என்பதோடு, குறித்த பொருட்களை இலங்கை சுங்கத்தின் மாற்றம் செய்யப்பட்ட முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்ப முடியும் என சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உள்ள முறைமையின் மூலம், சரக்கு போக்குவரத்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் காணாமல் போகின்றமை, கொள்கலன்களை திறப்பது போன்ற முறையற்ற செயல்கள் தொடர்பில், சில தரப்பினர் இலங்கை சுங்கத்தை குற்றம் சுமத்திய போதிலும், இவை தொடர்பான இடைத்தரகர்களால் இவை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த மூன்று நாட்களில், 'Door to Door' பொருட்கள் சேவை விநியோக முறையின் மூலம் சுமார் 20 கிலோகிராம் போதைப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை சுங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, இக்காரணத்தினாலும் இம்முறையை இடைநிறுத்துவதற்கு வழிவகுத்துள்ளது.
வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களினால் போதைப்பொருள் விநியோகம் தற்போது இந்த முறையின் ஊடாக இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக, இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முறையாக மேம்படுத்தப்பட்ட வேலைத்திட்டமான பின்வரும், உரிய வெளிப்படுத்தமைக்கு உட்பட்ட ஒழுங்குபடுத்தலின் கீழ், புதிய முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருக்கொட மேலும் தெரிவித்தார்.
மீடியா வெளியீடு – 25/11/2023
'வீட்டுக்கு வீடு' சேவையை இடைநிறுத்த இலங்கை சுங்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
இது தவறானது.
இந்த சேவை நிறுத்தப்படாது எனவும், இது இடைநிறுத்தப்படவுள்ளதாக வெளியாகிய செய்ய உண்மை இல்லை எனவும் சுங்க பேச்சாளர், சிரேஷ்டசுங்க பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
தற்போது ஒழுங்குபடுத்தப்படாத இந்த செயல்முறைக்குப் பதிலாக, அதில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்க ஒழுங்குபடுத்தப்பட்டு நெறிப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக,
ஒவ்வொரு பொதியின் உண்மையான உரிமையாளர்களை அடையாளம் காணுதல்.
சுங்க வரிச் சலுகையை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்.
வணிகச் சரக்குகள், போதைப் பொருட்கள் உட்பட தடைசெய்யப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துவதற்கு சேவையைப் பயன்படுத்துவதைத் தடுத்தல்.
பொதிகளில் உள்ள பொருட்கள் சுங்கத்தில் திருடப்படும் என்ற தவறான கூற்றுக்கு தீர்வு காணுதல்.
இந்த செயல்முறையின் கீழ் எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகத அல்லது அதற்குப் பிறகு கப்பலில் அனுப்பப்பட்ட அனைத்து கொள்கலன்களும் சுங்க அனுமதிக்காக பதிவுசெய்யப்பட்ட UPB கிடங்குகளுக்கு அனுப்பப்படும்.
ஒவ்வொரு பொதியையும் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் அடையாளம் காணப்படுவார்கள் (இதனால் கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால், பொறுப்பானவர்கள் கைது செய்யலாம்).
அனைத்து தரவும் ASYCUDA கட்டமைப்பில் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளீடுகள் செயலாக்கப்படும் (ஒவ்வொரு பொதியின் உள்ளடக்கங்களின் பதிவுகள் மற்றும் ஏதேனும் சுங்க மதிப்பீடு உருவாக்கப்பட்டால் அதில் கிடைக்கும்).
சரக்குகளின் வகை (UPB அல்லது பரிசுகள்) அடிப்படையில் சரக்குகள் கையாளப்படும். இதனால் வரி விதிக்கப்படும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு வரிகள் வசூலிக்கப்படும்.
சுங்க அனுமதி முடிந்ததும், ‘Door to Door’ நிறுவனங்களிடம் விநியோகத்திற்காக சரக்குகள் வெளியிடப்படும்.
ஏற்கனவே அனுப்பப்பட்ட அல்லது நவம்பர் 30ஆம் திகதி வரை அனுப்பப்படும் அனைத்து கொள்கலன்களும் ஏற்கனவே உள்ள நடைமுறையின் கீழ் விடுவிக்க அனுமதிக்கப்படும் என சீவலி அருக்கொட மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டிற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரிச் சலுகைகளை அதிகரிப்பதற்கான முறைமையை தயாரிப்பதில் இலங்கை சுங்கத் திணைக்களம் தொடர்ந்தும் தவறியுள்ளதாக, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.