சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக மெளலவி அப்துல் ஹமீட், பரத நாட்டியம் தொடர்பில் இழிவாக பேசியமை குறித்து முஸ்லிம்-தமிழ் சமூகங்களைச் சேர்ந்தோர் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் குறித்த கமௌலவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவர் – அவர் பேசி தயாரித்த வீடியோ ஒன்றினை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.
ஆசிரியர் தினத்தின் போது – பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் முஸ்லிம் ஆண் ஆசிரியர்கள் – நடனமாடியமை குறித்து, தனது வீடியோவில் கண்டித்துப் பேசியுள்ள மௌலவி ஹமீட், அந்த ஆசிரியர்களை மிகவும் மோசமாக திட்டியுமிருந்தார்.
மேலும், அந்த நிகழ்வுகளில் முஸ்லிம் ஆண் ஆசிரியர்கள் பரத நாட்டியம் ஆடியுள்ளதாக தனது வீடியோவில் பேசியுள்ள மௌலவி ஹமீட், பரத நாட்டியத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரதக் கலைக்கு எதிராக மௌலவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.