தென்கொரியாவில் காய்கறி பெட்டிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமல், ரோபோட் ஒருவரைக் கொன்றுவிட்டதாகச் செய்தி நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலைத் தெரிவித்திருக்கிறது.
தென்கொரியாவில் ரோபோட்டிக் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த 40 வயது நபர் ஒருவர், தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள விளைப்பொருள்கள் விநியோக மையத்திலும் பணிபுரிந்திருக்கிறார். அந்த மையத்தில் காய்கறிப் பெட்டிகளை எடுத்து சீல் செய்யும் பணிக்கு ரோபோட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்நிலையில், அதில் ஒரு ரோபோட் காய்கறிப் பெட்டிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பி, அங்குப் பணி செய்துகொண்டிருந்த ரோபோட்டிக் நிறுவன ஊழியரைக் காய்கறிப் பெட்டி என நினைத்துத் தூக்கி, மரப்பெட்டிகளுக்கு இறுக்கமாக சீல் வைக்கும் மெஷினின் பெல்ட்டில் வைத்திருக்கிறது. இறுக்கமான பிடியிலிருந்து தப்ப முடியாமல் திணறிய அந்த நபரை, பெல்ட்டில் வைத்து மிஷினுக்குள் திணித்திருக்கிறது அந்த ரோபோ. இதனால், அந்த நபரின் தலை, முகம், நெஞ்சுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
தென் கொரியாவில், ரோபோ தொழிநுட்பக் கோளாறு காரணமாக தாக்குதலுக்காளாகி, இந்த ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதன் மூலம் இரண்டாக அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம், தென் கொரியாவைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர், வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்தபோது, ரோபோவிடம் சிக்கி பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.