சுகாதார அமைச்சின் தாய் சேய் நலன்புரி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட திரிபோசா பக்கற்றுக்களை திருடி விற்பனை செய்த மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 1,413 பக்கற்றுக்கள் அடங்கிய 30 பொதிகளில் இருந்த திரிபோசா பக்கற்றுக்களில் 750 கிராம் எடை கொண்ட 150 பக்கற்றுகளை திருடிய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.கஜநாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு எடுத்துவரப்பட்ட மேற்படி திரிபோசா பக்கற்றுக்களை திருடி விற்பனை செய்த மட்டக்களப்பைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் மற்றும் மாவட்ட பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.