தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும், அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமது கோரிக்கையை ஏற்று, தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளிக்கு விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்த ஆளுநருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.