சடலம் அடக்கம் செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நளின் மெதவக முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பஸ் நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், கம்பளை, மேரிவில வத்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் சிலர் வந்து, குறித்த சடலமானது தனது 59 வயதுடைய மகன் லாசர் மைக்கேலின் சடலம் என கூறி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினர் மதச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர்.
எவ்வாறாயினும், இறுதிச் சடங்கு நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நபர் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் இறந்தாக தெரிவிக்கப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் சம்பவம் குறித்து மரண விசாரணை அலுவலகத்திற்கு அறிவிக்க அலுவலகத்தில் ஆஜரானார்கள்.
குறித்த மர்ம சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.