முஸ்லிம் மார்க்க சட்ட விதிகளின்படி, ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்டவை என்றும் 'ஹராம்' என்றால் தடை செய்யப்பட்டவை என்றும் பொருள். இந்தியாவில் ஹலால் தரச்சான்று சட்டப்பூர்வமாக நடைமுறையில் இல்லை. எனினும் சில தனியார் நிறுவனங்கள் உணவு, மருந்து, அழகு சாதன பொருட்களுக்கு ஹலால் தரச் சான்றுகளை அளித்து வருகின்றன.
இதுதொடர்பாக உத்தர பிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்த சைலேந்திர குமார் சர்மா என்பவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், "ஹலால் இண்டியா பிரைவேட் லிமிடெட் - சென்னை, ஜமாத் உலமா ஹிண்ட் அறக்கட்டளை - புதுடெல்லி, ஹலால் கவுன்சில் ஆப் இண்டியா- மும்பை, ஜமாத் உலமா - மும்பை ஆகிய அமைப்புகள் பல்வேறு பொருட்களுக்கு சட்டவிரோதமாக 'ஹலால்' தரச்சான்றுகளை அளித்துவருகின்றன. இதற்கு தடை விதிக்கவேண்டும்" என்று கோரினார்.
இதுதொடர்பாக லக்னோ பொலிஸார் வழக்கு பதிவு செய்னர். இதைத் தொடர்ந்து உத்தர பிரதேச அரசு, சனிக்கிழமை (18) பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
உத்தர பிரதேசத்தில் ஹலால் தரச் சான்று பெற்ற பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. தடையை மீறுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் இந்த தடை வரம்புக்குள் வராது.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
ISI மற்றும் FSSAI தரச்சான்று நடைமுறைகளே சட்டப்பூர்வமானது. 'ஹலால்' தரச் சான்று நடைமுறை சட்டவிரோதமானது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டார்.
இதன்படி ஹலால் தரச் சான்று நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். சட்டவிதிகளின்படி அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என உத்தர பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.