முந்திய செய்தியை இங்கே படிக்கலாம். https://www.yazhnews.com/2023/10/blog-post_575.html
முல்லைத்தீவு - நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அப்பெண்ணின் கணவன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 23 வயதான பெண்ணும், முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23 வயதான ஆணும் திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி K.சங்கீத் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இளம் குடும்ப பெண் தனது தாயாரிடம் தொலைபேசியில் நாளாந்தம் உரையாடுவதாகவும் ஒக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்துள்ளது,
இந்நிலையில், மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு அப்பெண்ணின் தாயார் திங்கட்கிழமை (23) சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இருக்கவில்லை. வீட்டின் பின்புறம் பார்த்தபோது புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண்ணின் தாய், முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே சடலம் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட கணவன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.