இஸ்ரேலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அனுலா ஜயதிலக்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது பூதவுடல் இன்னும் 2 நாட்களுக்குள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தால் பெற்றுக்கொள்ளப்படும் என தூதுவர் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலின் போது காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பெண்களின் தகவல் இன்னும் கிடைக்கவில்லை என தூதுவர் இன்று முன்னதாக தெரிவித்ததை அடுத்து மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு இலங்கைப் பெண்கள் இஸ்ரேல்-ஜோர்டான் எல்லையில் கடத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு பெண்களைக் கண்டறிய இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கையர்களை அடையாளம் காண்பதற்காக, சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்களின் விவரங்களை வழங்குமாறு ஹமாஸ் போராளிகளிடம் செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, காஸாவில் வசிக்கும் இலங்கையர்களை எகிப்து ஊடாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, எகிப்து தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஃபா எல்லைக் கடவை ஊடாக இலங்கையர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை அலுவலகத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)