பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கின் சக்திகள் போராடுவதை வரவேற்கின்றோம். அத்தோடு பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே பாலஸ்தீனத்துக்கான போராட்டம் உண்மையானதாக அமையும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்துக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையில் வெடித்திருக்கும் போர் மிகவும் உக்கிரமானது. ஒன்றும் அறியாத சாதாரண மக்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள் என இரு பக்கமும் ஆயிரங்களை தாண்டி இதுவரை கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளனர்.
இதனை மனித நேயம் கொண்டவர்களால் அங்கீகரிக்க முடியாது. இத்தகைய நிலை உருவாவதற்கு யுத்தத்தை விரும்பும் பயங்கரவாத நாடுகளும், அதற்கு அமைதி காத்து அனுமதி அளிக்கும் உறவு நாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் பொறுப்புக்கூறல் வேண்டும்.
பாலஸ்தீனத்தை இறைமையுள்ள நாடாக அங்கீகரிப்பதும் சொந்த நிலத்தில் அந்நியமாக்கப்படும் மக்களுக்கு வாழ்வுக்கான உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதுமே தீர்வுக்கான ஒரே வழி என இன அழிப்புக்கும், இனப்படுகொலைக்கும் முகங்கொடுத்து நீதிக்காக சர்வதேசத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கும் மக்களாக ஐ.நா. சபையை கேட்டுக்கொள்கின்றோம்.
பாலஸ்தீன மக்களின் தாயக உரிமையை, இறைமையை அங்கீகரிக்காமல் அவர்களது பூமியிலேயே அவர்களை அந்நியர்களாக்கி உலக வல்லரசுகள் தமது அரசியல், பொருளாதார நலங்களுக்காக அவர்களை அழிக்க நினைப்பது பயங்கரவாதமே. அதன் உப விளைவாகவே ஹமாஸ் போன்ற இயக்கங்கள் உருவெடுத்தன. அதனை பயங்கரவாதமாக்குவதும் பயங்கரவாதமே. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோன்று நாடுகள் பிரிந்து போர்க்கொடி தூக்கி இருப்பது வறுமையில் வீழ்ந்துள்ள நாடுகளை மேலும் வறுமைக்குள் தள்ளுவதாக அமையும். இது உலக அமைதி, ஒழுங்கை மேலும் மோசமாக சீர்கெடச் செய்யும். இதுவும் பயங்கரவாதமே.
இலங்கையில் வட கிழக்கு தமிழர்களின் நீண்ட நாள் அரசியல் அபிலாசைகள் தீர்க்கப்படாததன் காரணமாகவே பல்வேறு விடுதலை அமைப்புகள் தோற்றம் பெற்றன. இறுதியில் பிரச்சினைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கமே காரணம் என அவர்களை அழித்தவர்கள் இதுவரை வடகிழக்கு தமிழர்களின் இறைமையை அங்கீகரிக்காமல் பௌத்த சிங்கள மேலாண்மை வாதத்தில் இராணுவத்தின் துணையோடு, இராணுவ முகம் கொண்ட சிங்கள பௌத்த பிக்குகளை ஏவிவிட்டு நில ஆக்கிரமிப்பை தொடர்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் வீதியில் நின்று போராடுவதற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் இன்னும் ஒரு வடிவமே மட்டக்களப்பு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம்.
வடகிழக்கு தமிழர்களின் இறைமையை அங்கீகரிக்காமல், அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றாமல், அவர்களது பாரம்பரிய தாயக பூமியை ஆக்கிரமித்து பௌத்த பூமியாக்க துடிக்கும் பௌத்த துறவிகளுக்கு அனுமதி அளிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாலஸ்தீன-/ இலங்கை நட்புறவு அமைப்பின் தலைவராக இருப்பது தேச விடுதலைக்காக ஏங்கி நிற்கும் பாலஸ்தீன மக்களுக்கு அவமானமே. இலங்கை மக்களுக்கு அது நகைப்புக்கிடமானதே.
அது மட்டுமல்ல, பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கின் சக்திகள் முகநூலில் பதிவிடுவதோடு போராட்டத்தை முன்னெடுப்பதோடு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதனை நாம் வரவேற்கின்றோம்.
அதே நேரம் அவர்களிடம் நாம் "வடகிழக்கு தமிழர்களின், மலையகத் தமிழர்களின் இறைமைக்கும், அரசியல் அவிலாசைகளுக்கும், தாயக கோட்பாட்டுக்கும் ஆதரவாகவும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்பதோடு பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றோம். அவ்வாறு நீங்கள் செய்தால் மட்டுமே பாலஸ்தீனத்துக்கான உங்கள் போராட்டம் உண்மையானதாக அமையும்.
யுத்த வடுக்களோடு வலிகளையும் சுமந்து தமிழர் தேசியம் காக்க போராடும் சமூகமாக பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகவும் தாயக மீட்புக்காகவும் நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
இன விடுதலைக்காக போராடும் இயக்கங்களை அழிக்கலாம்; ஒழிக்கலாம். ஆனால், கொள்கை பற்றோடு, தனியாக மண் தாகத்தோடு கொள்கை உள்ள உணர்வுகளை எவராலும் அழிக்க முடியாது. அது புதிய வடிவங்களோடு, புதிய வீச்சோடு தொடரும் என்பதே உண்மை.
உலக பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் வல்லரசுகள் தனது சுயநல அரசியலில் இருந்து விலகி உலகின் அமைதிக்காக ஒடுக்கப்படும் இனங்களின் விடுதலைக்காக ஐக்கிய நாடுகளின் ஒழுங்கு விதிகளை முறையாக கடைப்பிடித்து சமாதானத்துக்கு வழிகாட்ட வேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம் என்றார்.