இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சண்டை இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், திடீரென எகிப்து வீரர்கள் சிலர் இஸ்ரேல் பீரங்கி தாக்குதலால் காயமடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (22) இஸ்ரேல் நாட்டின் பீரங்கியில் இருந்து வந்த குண்டுகள் எகிப்து நாட்டில் தாக்கியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையே மோதல் நடந்து வரும் நிலையில், திடீரென ஏவுகணை எகிப்தைத் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து ஹமாஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் நேரடியாக மோதலில் ஈடுபடவில்லை.
மேலும், சர்வதேச வர்த்தகத்தின் அடிநாதமாக இருக்கும் சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டில் தான் இருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 12% இந்த சூயஸ் கால்வாய் வழியாகவே நடக்கிறது.
இந்தச் சண்டையில் எகிப்து உள்ளே வந்து சூயஸ் கால்வாய் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் அது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். உலகின் அனைத்து நாடுகளும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
இதனால் எகிப்து மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. அதாவது இது திட்டமிடப்பட்ட தாக்குதல் இல்லை என்றும் தவறுதலாக எகிப்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து விரிவான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும், எகிப்து தரப்பிலும் இது குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது இஸ்ரேல் பீரங்கியில் இருந்து எகிப்து நோக்கி எதிர்பாராத விதமாகப் பாய்ந்த இந்த ஷெல் தாக்குதலில் சில எகிப்து எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு மைனர் காயம் ஏற்பட்டதாக எகிப்து ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.