வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு பொதுமக்கள் மத்தியில் பேசிய பாப்பரசர் பிரான்சிஸ், இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து வேதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், "இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிக்கிறது. பயங்கரவாதமும், போரும் தீர்வுகளை கொண்டுவருவதில்லை, மரணத்தை மட்டுமே கொண்டு வருகின்றன. போர் ஒரு தோல்வி. ஒவ்வொரு போரும் தோல்விதான். எனவே போரை உடனடியாக நிறுத்தும்படி இருதரப்பையும் வேண்டுகிறேன்" என்றார்.
இதனிடையே இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் அமைதி காக்கும்படி இருதரப்பையும் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் ஹமாஸ் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலிய இசை விழா நடந்த இடத்தில் 250க்கும் அதிகமான உடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலில், 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 2000த்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், மேலும் பலர் பணயக் கைதிகளாக காசாவில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அவசர உதவிகள் மூலமும், இஸ்ரேலில் பாதுகாப்பை அதிகரிப்பதன் மூலமும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா கூடுதல் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.