முல்லேரியாவில் தலை மற்றும் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று (03) பொலிஸாரிடம் சரணடைந்த இருவரில் ஒருவரான வர்த்தகர் வழங்கிய வாக்கு மூலத்துக்கும் மற்றையவரின் வாக்குமூலத்துக்குமிடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் தொடர்பில் மஹர நீதிமன்றுக்கு சப்புகஸ்கந்த பொலிஸார் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இருவரையும் 72 மணிநேரம் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டாவது சந்தேக நபரான ரோஹித்த குமார என்பவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறித்த பெண், வர்த்தகரை அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு தொல்லை கொடுத்து அவரது நிம்மதியைக் குலைத்தார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்று தான் வர்த்தகரிடம் கூறியதனையடுத்து ஒரு கத்தியை தயார் செய்ததாகவும் பொலிஸாரிடம் ரோஹித்த குமார தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் வர்த்தகர் குறித்த பெண்ணை அவரது காரில் சபுகஸ்கந்த வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் அங்கு சென்ற பெண், வர்த்தகரின் வீட்டிலிருந்து வெளியேறியபோது கத்தியால் பெண்ணை தாக்கியதாகவும் இதன்போது அவர் உயிரிழந்தார் எனவும் ரோஹித்த குமார பொலிஸாரிடம் மேலும் தெரிவித்தார்.
பின்னர் தான் வர்த்தகருடன் இணைந்து உயிரிழந்த பெண்ணின் உடலைத் துண்டித்து அதனை அன்றிரவு வர்த்தகரின் காரில் எடுத்துச் சென்று உடலையும் மன்னா கத்தியையும் கால்வாயில் வீசியதாக ரோஹித்த குமார தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் 51 வயதுடைய டி.ஜி. பிரதீபா என்ற பெண்ணே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.