எனது சகோதரருடன் மனைவி தவறான தொடர்பை வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலே இருவரையும் தாக்கினேன் என நாவற்குழியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றபோது கைதான சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நாவற்குழி ஐயனார் கோயிலடியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் வீட்டில் கணவனை காணாத நிலையில் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.
குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய பொலிஸார் கணவரை நோக்கி தீவிர தேடுதலை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் ஏறி சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் "தான் மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது" என சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், "மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலே இருவரையும் தாக்கினேன்" எனவும் தெரிவித்தார்.
மேற்படி சந்தேக நபர் ஏற்கெனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதுடன் வேறு சில குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவராகவும் கருதப்படுகிறார்.
பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை மற்றும் சட்ட மருத்துவ அறிக்கை மேற்கொண்டதன் பின்னரே தெரியவரும்.
சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்காகி சகோதரரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விசாரணைகள் நிறைவுற்றதும் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.